Friday, November 12, 2010
கண்கலங்க வைத்தக் கட்டுரை.
"வள்ளியின் பிள்ளை நான்!"
குறப்புத்தி' என்கிறீர்கள். 'குறப்பய மாதிரி முழிக்கிறான்' என குழந்தையைக்
கொஞ்சுகிறீர்கள். 'குறவன் புத்தி சும்மா இருக்குமா?' என்கிறீர்கள். அன்றாட வாழ்வில், குற்ற உணர்ச்சி எதுவும் இன்றி நீங்கள் உதிர்க்கும் சொற்கள் ஒவ்வொன்றும், சமூகத்தின் அடிமட்டத்தில் வாழும் குறவர் இன மக்களைக் குறிவைத்துக் காயப்படுத்துவதை நீங்கள்அறி வீர்களா?"-தீர்க்கமாகக் கேட்கிறார் மணிக்கோ. பன்னீர்செல்வம். குறவர் இனத்தில் இருந்து படித்து, முன்னேறி வந்திருக்கும் வெகு சிலரில் ஒருவர். 'சனங்களின் பாட்டு', 'தொடரும் காலனிய குற்றம்', 'குறவர்-பழங்குடி இன வரைவியல் ஆய்வு' என்ற கவனிக்கப்பட்ட நூல்களை எழுதியவர். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து வரும் பன்னீர்செல்வம், அடிமட்ட சாதியில் பிறந்து, ஆதிக்க சாதிகளின் உலகத்தில் பிரவேசிப்பதன் உளவியல், உலக சிக்கல்களை மையமாகக்கொண்டு நாவல் ஒன்றை எழுதிக்கொண்டு இருக்கிறார்.
"தமிழ்நாட்டில் குறவர் என்றாலே, எல்லோருக்கும் நினைவில் வருவது நரிக்குறவர்கள்தான். அவர்கள் வட இந்தியாவின் ஆரவல்லி மலைத்தொடரில் இருந்தும், குஜராத் பகுதிகளில் இருந்தும் நாடோடிகளாக இடம் பெயர்ந்து வந்தவர்கள். இவர்களைத் தவிர, தமிழ்நாட்டில் 28 வகையான குறவர்கள் இருக்கிறார்கள். கல்குறவர், கறிவேப்பிலை குறவர், கூடைமுறம் கட்டிக் குறவர், உப்புக் குறவர், பூனைக்குத்தி குறவர்... என்ற இவர்கள் அத்தனை பேரும் தமிழ்நாட்டின் பூர்வீகப் பழங்குடிகள். மலைக் காடுகளில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்கள். திருச்செந்தூர் கோயிலில் கையில் மந்திரக்கோல் வைத்துக்கொண்டு சோதிடம் பார்க்கும் பெண்ணிடம் 'நீங்கள் யார்?' எனக் கேளுங்கள், 'நாங்கள் வள்ளிமக்கா' என்பாள். நாங்கள் வள்ளியின் வழி வந்தவர்கள். குறிஞ்சி நிலத்தில், தேனும் தினை மாவும் உண்டு வளர்ந்த ஆதித் தமிழர்கள். எங்களிடம் இருந்து வனம் பிடுங்கப்பட்ட பின்பு, மெள்ள மெள்ள சமவெளிப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தோம்.
நான் 'கூடைமுறம் கட்டிக் குறவர்' பிரிவைச் சேர்ந்தவன். சாலை ஓரங்களில் அமர்ந்து கூடைமுறம் கட்டுவதே எங்கள் தொழில். திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டி, சொந்த ஊர். தந்தைக்கு அரசு நிறுவனத்தில் வாட்ச்மேன் வேலை கிடைத்ததால், தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்தோம். புதிய ஊரில் எங்கள் சாதி யாருக்கும் தெரியாது என்பதால், எங்களை 'மதுரைப் பக்கத்தில் இருந்து வந்த பிள்ளைமார்' என்றே நினைத்தார்கள். பிறப்பால் தலித்தாக இருந்துகொண்டு, நடைமுறை வாழ்க்கையில் உயர்சாதியாக நடிக்க ஆரம்பித்தோம். ஆனால், அது பெரிய துயரமானதாக இருந்தது. எந்த நேரமும் சாதி வெளியில் தெரிந்துவிடுமோ என்று பதற்றமாக இருக்கும். யாராவது 'குறப்பய மாதிரி இருக்கான் பாரு!' என்று யாரையேனும் திட்டினால், அப்போது நான் உயர்சாதி மனநிலையில் அதைச் சகித்துக்கொள்ள வேண்டும். ஒருநாள், என் அப்பாயி இறந்துபோன சேதி கேட்டதும், அப்பா வாய்விட்டு அழுதார். பதறிப்போன அம்மா, 'மெதுவா அழுங்க' என அப்பாவைத் தடுத்தார். ஏனெனில், விஷயம் தெரிந்தால் சுற்றி உள்ளவர்களும் துக்கத்துக்கு ஊருக்கு வருவதாகச் சொல்வார்கள். வந்தால் சாதி தெரிந்துவிடும். சாவு தெரிந்தாலும் சாதி தெரியக் கூடாதே!
கல்லூரிப் படிப்பு முடித்து 'தமிழய்யா'வாக தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே இருக்கும் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தேன். சுற்று வட்டாரத்தில் 'தமிழய்யா' என்று எனக்கு நல்ல பெயர். நான் தஞ்சாவூரில் இருந்து வந்துஇருந்ததால், என்னை 'கள்ளர்' என்று நினைத்துக் கொண்டார்கள். ஒருமுறை என் மாணவன் ஒருவன் யதேச்சையாக என் சான்றிதழில் 'இந்து-குறவன்' என்று எழுதி இருந்ததைப் பார்த்துவிட்டான். கதவை மூடிக்கொண்டு, 'இதை எல்லாம் வெளியில் சொல்லாதடா' என்று கேட்டுக்கொண்டாலும், அவன் பேச்சுவழக்கில் சொல்லிவிட்டான். 'தமிழய்யா ஒரு குறவர்' என்ற விஷயம் மெதுவாகத் தெரிய ஆரம்பித்தது. உடன் தங்கியிருந்த ஆசிரியரின் பணம் திருட்டு போனபோது, 'குறவன் புத்தி சும்மா இருக்குமா?' என்று தொடர்பே இல்லாத என் மீது திருட்டுப் பட்டம் சுமத்தப் பட்டது. இதை எல்லாம் கடந்து, சம்பள உயர்வுக்காக மட்டுமே ஆசிரியர்கள் போராடிய சமயத் தில், மாணவர்களின் உரிமைகளுக்காக நான் போராடினேன். அதனால், சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து விடைபெறும் வரையிலும் மாணவர்கள் என் மீது அன்பாகவே இருந்தார்கள்!" என்கிற பன்னீர்செல்வம்,
ஏற்கெனவே ஒரு பி.ஹெச்டி முடித்தவர். தற்போது, 'தமிழக கறுப்பின இலக்கியப் படைப்புகள் கட்டமைக்கும் அடையாள அரசியல்' என்ற தலைப்பில், இரண்டாவது பி.ஹெச்டி. செய்துகொண்டு இருக்கிறார்.
"இப்போதும் திருடர்கள் பற்றி எச்சரிக்க போலீஸ் கொடுக்கும் அறிவிப்பு என்ன? 'திருடர்கள் எந்த வடிவிலும் வரலாம். பச்சைக் குத்து வதுபோல, அம்மி கொத்துவதுபோல, பூனைக் குத்துவதுபோல, கூடை முடைவதுபோல... எந்த வடிவிலும் வரலாம், ஜாக்கிரதை!' என போலீஸ் எச்சரிப்பது முழுக்க குறவர்களைக் குறிவைத்துதான். இது எல்லாம் சேர்ந்து, மக்கள் மனதில் குறவர்கள் என்றாலே, திருடர்கள் என்ற உளவியலை விதைக்கிறது. ஆனால், உண்மை அதுஅல்ல. என்னைப் போன்ற வெகு சிலரைத் தவிர, இன்னமும் குறவர்கள் அத்தனை பேரும் பன்றி மேய்த்துக்கொண்டும் துப்புரவு வேலைகள் செய்துகொண்டும் விளிம்பு நிலையில்தான் வாழ்கிறார்கள். இப்படியான எனது வாழ்க்கை அனுபவங்களை, ஒரு குறவர் இனத்துக்காரன் உலகத்தை எதிர்கொள்ளும்போது நடக்கும் உண்மைகளை அப்படியே எழுதி இருக்கிறேன். குறிஞ்சி நிலத்தில், தேனும் தினைமாவும் தின்று வளர்ந்த வள்ளியின் பிள்ளைகள், சமவெளியில் சாக்கடையோரம் தள்ளப்பட்ட கதை அது!"
நன்றி: ஆனந்த விகடன்
டிஸ்கி: படித்து முடித்ததும் மனதை பிசைந்ததால் கட் அண்ட் பேஸ்ட், விகடன் படிக்காதவர்களுக்காக.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சாதிய ஏற்றத் தாழ்வுகள் நிரம்பி வழியும் சமூகம் இது என்பதை காட்டும் கட்டுரை. சாவைக் கூட சொல்ல முடியாத அவலம்... குறவர் என்றால் திருடர் என்பது மதுரையில் அதிகம். என் பள்ளியில் குறவர் இன மக்களை படிக்க வைக்க ஆசிரியர்களை கேட்டுக் கொண்டேன். பள்ளி வாகனத்தையும் பள்ளி செயலர் அனுமதித்தார், ஆனால் சக பெற்றோர் பலர் திருட்டு கூட்டம் சார் வேண்டாம் இந்த விசப் பரிட்சை என என்னை எச்சரித்தனர். அவரின் குமுறல்கள் நிஜம்... பகிர்வுக்கு நன்றி.
thanks for sharing
ஏற்கனவே விகடனில் படித்தேன். பதிவில் உங்களை பார்ப்பது மகிழ்ச்சி
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.