A எனது நாட்குறிப்பு: திமுக வெற்றி உறுதி!

Monday, April 11, 2011

திமுக வெற்றி உறுதி!

நன்றி:யுவகிருஷ்ணா
http://www.luckylookonline.com/
April 11, 2011


ஒரு வழியாக திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது. அதிமுக மெஜாரிட்டி பிடிக்கும். ஸ்வீப் அடிக்கும் என்று மிரட்டிக் கொண்டிருந்த ஊடகங்கள் ஒருவழியாக தரையில் கால் பதித்திருக்கின்றன. ‘அதிமுக வரும், ஆனா வராது’ என்று சொல்லத் தொடங்கியிருக்கின்றன. போஸ்ட் போல் சர்வேயில் தங்களது தவறுகளை திருத்திக் கொண்டு திமுக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கிறது என புதுக்கணிப்பு சொல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் கணிப்புக்கு மிகக்கடுமையாக உழைத்தாக வேண்டும். கிட்டத்தட்ட மூன்றரைக் கோடி வாக்காளர்களின் மனநிலையை 5000 பேரின் கருத்துகளை வைத்து பொதுமைப்படுத்திவிட முடியாது. சாம்ப்ளிங் அளவு குறைந்தபட்சம் மூன்றரை லட்சமாகவாவது இருந்தால்தான் ஓரளவுக்காவது உண்மைநிலையை நெருங்க முடியும். ஆயினும் இந்த எண்ணிக்கையே கூட துல்லியமான முடிவுகளை தரப் போதுமானதல்ல. லென்ஸ் ஆன் நியூஸ் எனும் இணையத்தளம் 12 தொகுதிகளில் ‘சர்வே’ செய்து, அதிமுக தனித்தே 144 இடங்களை கைப்பற்றும் என்று கணித்த காமெடியை எல்லாம் லீசில் விட்டுவிடலாம்.

நக்கீரன் இதழின் கருத்துக் கணிப்புகள் ஓரளவுக்கு துல்லியமாகவே இருக்கிறது. 98ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் திமுக-தமாகா கூட்டணி தோல்வியடையும் என்று நக்கீரன் சொன்னபோது யாரும் நம்பவேயில்லை. அதுபோலவே கடந்த 2009 பாராளுமன்றத் தேர்தலில் திமுக-காங் கூட்டணி 28 இடங்களை பிடிக்கும் என்றபோதும் யாரும் நம்பவில்லை. இம்முறை நக்கீரனின் கணிப்பே கூட மகிழ்ச்சிகரமாக பொய்த்துப்போக வாய்ப்பிருக்கிறது. 140 தொகுதிகள் வரை திமுக கூட்டணி பெறும் என்று நக்கீரன் கணிப்பதாக தெரிகிறது.

தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் இன்றைய நிலையில் திமுக கூட்டணி 150 முதல் 160 இடங்கள் வரை வெற்றியடையும் என்பதாகவே நமக்கு தோன்றுகிறது.

ஜூனியர் விகடனின் நேற்றைய கணிப்பு திமுக கூட்டணிக்கு பெரிய மனதோடு, தாராளமாக 92 இடங்களை அளித்திருக்கிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜூ.வி. திமுக கூட்டணிக்கு 7 இடங்களை தந்திருந்தது. ஆனால் தேர்தல் முடிவில் திமுக கூட்டணி 28 இடங்களை கைப்பற்ற முடிந்தது. எனவே ஜூ.வி.யின் இப்போதைய கணிப்பை வைத்து கணக்கிட்டுப் பார்த்தால் திமுக கூட்டணி ஸ்வீப் அடித்தாலும் (180க்கும் மேல்) ஆச்சரியப்பட ஏதுமில்லை.

எனவே ‘மாற்றம், மாற்றம்’ என்று முழங்கிக் கொண்டிருப்பவர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது 2014 வரைக்குமாவது கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். வேண்டுமானால் உங்களுக்காக ‘பாண்டிச்சேரி’ தற்காலிக நிவாரணத்தை அளிக்கலாம்.
தேர்தல் கணிப்புகளை வெளியிட்ட சில ஊடகங்களில், விட்டுப்போன அல்லது வேண்டுமென்றே விட்டுவிட்ட, முக்கியமான சில விஷயங்கள் உண்டு.

ஒன்று. அரசு ஊழியர்களுக்கு அதிமுக மீது இருக்கும் அச்சம். தமிழகத்தில் சுமார் எட்டு லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களையும் சேர்த்து, இவர்களது கட்டுப்பாட்டில் (அதாவது குடும்பம், நட்பு, சுற்றம்) தோராயமாக முப்பது லட்சம் வாக்குகள் இருக்கிறது.

இரண்டு. 21 லட்சம் குடும்பங்களுக்கு கான்க்ரீட் வீடு கட்டித்தரும் திட்டம். இத்திட்டத்தில் நடப்பாண்டில் மூன்று லட்சம் குடும்பங்கள் பயனடைந்திருக்கின்றன. மீதி 18 லட்சம் குடும்பங்களுக்கு படிப்படியாக அடுத்த ஐந்தாண்டுகள் என்று திமுக அரசால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, டோக்கனும் வழங்கப்பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்தால் நிச்சயம் இத்திட்டம் அரோகராதான் என்று டோக்கன் வாங்கியவர்களுக்கு தெரியும். கிட்டத்தட்ட 60 லட்சம் வாக்குகள் இத்திட்டத்தில் சம்பந்தப்பட்டிருப்பதை எந்த ஊடகமும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

ஒரு ரூபாய் அரிசியில் தொடங்கி 108 ஆம்புலன்ஸ், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மகளிருக்கு திருமண உதவித்திட்டம், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, கைம்பெண்கள் மற்றும் வயதானோர் உதவித்தொகை, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பொருளாதார ரீதியில் கைகொடுத்தது, விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட் என்று ஏராளமான நலத்திட்டங்களால் வாக்களிக்கவிருக்கும் ஒவ்வொரு வாக்காளரும் ஏதோ ஒருவகையில் நேரடியாகவே திமுக அரசால் இந்த ஆட்சிக் காலத்தில் பயன் பெற்றிருக்கிறார்கள். எனவே அதிமுக, தேமுதிக கட்சியினரைச் சேர்ந்தவர்கள் கூட திமுக கூட்டணிக்கு வாக்களிக்கும் வாய்ப்பு அதிகமிருப்பதாக யூகிக்கிறேன்.

நலத்திட்டங்கள் மட்டுமின்றி வளர்ச்சிப் பணிகளிலும் திமுக அரசு குறை வைக்கவில்லை. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மதுரை மற்றும் 3 நகரங்களில் கைத்தறி பூங்காக்கள், உலகத் தரம் வாய்ந்த நூலகம் சென்னையில், தலைமைச் செயலகம், சென்னைக்கு மெட்ரோ ரயில், தமிழகமெங்கும் பாலங்கங்கள், கான்க்ரீட் சாலைகள், புதிய அரசுக் கட்டிடங்கள், நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் என்று 95 சதவிகித தாலுகாக்கள் மற்றும் யூனியன்களில் ஏதேனும் ஒரு பெரிய கட்டமைப்பினை உருவாக்கியிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம், குடும்ப ஆதிக்கம், லொட்டு, லொசுக்குவெல்லாம் ஆட்சிக்கு எதிரான அலையை கிளப்ப போதுமானதல்ல. திமுகவுக்கு எதிரான விஷயங்கள் என்றால் மின்வெட்டு மற்றும் விலைவாசியாக மட்டுமே இருக்கக்கூடும். விஜய்-அஜித் ரசிகர்களின் எதிர்ப்பு திமுகவுக்கு அச்சுறுத்தல் என்றொரு மகா த்ராபையான காரணத்தை கூட ஒரு பத்திரிகை கண்டுபிடித்திருந்ததை வாசித்தேன். என்னத்தைச் சொல்ல?

திமுக இம்முறை வெல்லப்போவது அதிமுக கூட்டணியை மட்டுமல்ல. திமுகவுக்கு எதிராக அதிமுகவோடு கூட்டணி அமைத்திருக்கும் ஊடகங்கள் மற்றும் தேர்தல் கமிஷனையும் சேர்த்துதான்.

படித்தவர்கள் இம்முறை திமுகவை ஆதரிக்க மாட்டார்கள் என்றொரு கருத்தாக்கம் இருக்கிறது. நகர்ப்புறங்களில் திமுக வாஷ்-அவுட் என்றும் சொல்லி வருகிறார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சென்னையில் இருக்கும் 16 தொகுதிகளில் 10 தொகுதிகளை திமுக கூட்டணி வெல்லப் போகிறது.

பூனை மட்டுமல்ல, யானை கண்ணை மூடிக்கொண்டாலும் கூட பூலோகம் இருண்டுவிடாது.
எழுதியவர் யுவகிருஷ்ணா at Monday, April 11, 2011

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.